ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் 7 பேர் பல மில்லியன் ரூபா செலவில் திட்டமிட்டிருந்த வெளிநாட்டு பயணத்தை தேசிய விளையாட்டு சபை இரத்து செய்ததாக முன்னாள் அமைச்சரும் தேசிய விளையாட்டு சபையின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்த கருத்து குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அர்ஜுன ரணதுங்கவின் கருத்து உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் செயற்குழு உறுப்பினர்கள் ஏழு பேர் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ணத்தில் அதிகாரிகளாக இணைந்து கொள்ளவிருந்தனர்.
எதிர்கால போட்டி சுற்றுப்பயணங்கள், லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் குறித்து ஆசிய கிரிக்கட் பேரவை மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் நிதியை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பயன்படுத்தாது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.