ரஞ்சன் ராமநாயக்கவிற்கு முழுமையற்ற விடுதலையே வழங்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இன்றி வழங்கப்பட்டுள்ள விடுதலையால் திருப்தியடைய முடியாது. எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு முழுமையான விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
எவ்வாறிருப்பினும் தற்போது வழங்கப்பட்டுள்ள முழுமையற்ற விடுதலையால் திருப்தியடைய முடியாது. எனவே அரசியலமைப்பின் 34 (2) உறுப்புரைக்கமைய ரஞ்சன் ராமநாயக்கவிற்கு முழுமையான விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.
அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இன்றியே அவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. எனினும் இந்த கட்டுப்பாடான விடுதலை போதுமானதல்ல.
ரஞ்சன் ராமநாயக்க மக்களுடனும் , மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு அவருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
எந்த தரப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று சிந்தித்து சரியான தீர்மானத்தை எடுக்கும் அறிவு ரஞ்சனுக்கு காணப்படுகிறது.
எனவே அவருக்கு சுயமாக சிந்திப்பதற்கும் , தீர்மானத்தை எடுப்பதற்குமான உரிமையும் இருக்கிறது. அவர் யாருக்கும் அடிமை இல்லை. அவர் யாராலும் இயக்கப்படுபவர் இல்லை என்பதால் , தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் அவருக்குரியது என்றார்.