இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்குப் பதிலாக சீனக் கடனைப் பயன்படுத்தி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் முற்றிலும் பொய்யானது என சீனதூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடரபில் எமது செய்தி பிரிவு சீன தூதரகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, கையகப்படுத்தல் தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைககு புறம்பானது என தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பது கடினம் என சீனா அறிவித்துள்ளதாகவும், தேவைப்பட்டால், சீனக் கடன் மூலமாக இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அரச சொத்துக்களை குறித்த கடனை பயன்படுத்தி ஈடுசெய்ய தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டங்களுக்கு பிரதான தடையாக இருப்பது சீனாவினால் இந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க அவர்கள் விரும்பாததே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிடம் இருந்து இலங்கை சுமார் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்று (28) மல்வத்து அஸ்கிரி பீடங்களுக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் சி ஷென்ஹோங், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு தொடர்ந்தும் சீனா உதவிகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்குமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சீனத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.