Our Feeds


Thursday, August 25, 2022

Anonymous

“சீனாவிடமிருந்து உரமும் இல்லை, பணமும் இல்லை” - நிர்க்கதியான இலங்கை! - அமைச்சர் சொல்லும் புது விளக்கம்.

 



சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 
 
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சீனா உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. 
 
எனினும், நாம் திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக  சீன நிறுவனம்  வேறு உரம் எதனையும் வழங்க இதுவரை முன்வரவில்லை. 
 
இது தொடர்பான நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. 
 
அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையிலான குழுவினர் அந்நிறுவனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். 
 
செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது பலனளிக்கவில்லை. 
 
இரண்டாவது முயற்சியாக குறித்த நிறுவனத்திடம், திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக இரசாயன உரம் கோரப்பட்ட போதும் அதற்கு இணங்கவில்லை. 
 
எமது தரத்துக்கு அமைய உரம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அவற்றை சரியான தர மதிப்பீடுகளுக்கு உற்படுத்தக்கூடிய வசதிகள் எமது தர நிர்ணய நிறுவனத்திடமில்லை. 
 
நாட்டுக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமக்குரிய பெருந்தொகையான டொலரை வெளிநாட்டில் செயலற்ற வகையில் வைத்திருப்பது நாட்டுக்கு பாரிய நட்டம். 
 
இந்த விடயத்தில் இவற்றை தவிர என்னால் வேறு எந்த முயற்சிகளையும் செய்யமுடியாது. எனவே, நீதிமன்றத்தின் ஊடாக இதற்கான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »