பயணிகள் விமானமொன்றின் விமானிகள் அறையில் சண்டையிட்ட விமானிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானிகள் இருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானமொன்றில் இம்மோதல் இடம்பெற்றது.
விமானம் புறப்பட ஆரம்பித்து சிறிது நேரத்தில் விமானிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
எனினும், இச்சம்பவத்தின் பின் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், விமானத்தின் பயணமானது இம்மோதலால் மாற்றமடையவில்லை எனவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானிகளுக்கு இடையிலான மோதலின்போது, விமான ஊழியர்கள் தலையிட்டனர். அதன் பின்னர் விமானிகள் அறையிலும் விமானி ஊழியர் ஒருவர் அமர்ந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.