Our Feeds


Wednesday, August 24, 2022

Anonymous

சீன கப்பல் விடயத்தில் இந்தியாவின் அளவுக்கு மீறிய செயற்பாடு? - விமர்சிக்கும் இந்திய ஊடகம்.

 



ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன கப்பல் வந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.


அதேநேரம் அந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாட்டையும் இந்திய ஊடகங்கள் நியாயப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் அவுட்லுக் என்ற இந்தியாவின் பிரபல சஞ்சிகை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறை முகத்திட்டத்தை இந்தியாவுக்கு முதலில் வழங்க முன்வந்தமையை நினைவுப்படுத்தியுள்ளது.

இந்தியா இந்த வாய்ப்பை நிராகரித்த பின்னரே சீனா அதனை ஏற்றுக்கொண்டது என்பதையும் அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தநேரத்தில் இந்தியாவின் தனியார் துறை, குறித்த  துறைமுக விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை அல்லது நிபுணத்துவம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

எனினும் ஹம்பாந்தோட்டையில்  சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான யுவான்வாங் 5 வந்தபோது அது தொடர்பில் இந்தியா அச்சம் வெளியிட்டு வருகிறது என்று சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது உதவுவதற்கு புதுடில்லி முதன் முதலில் களமிறங்கியது.

எனினும் பீய்ஜிங் மந்தமான நிலையில் இருந்தது.

இருந்தும் கூட கப்பல் விடயத்தில் இலங்கை, இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

உண்மை என்னவென்றால், தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தேவை என்பதாகும்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க இந்தியா எடுக்கும் நிலைப்பாட்டை போன்றே, இலங்கையும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவை விரும்புகிறது என்று அவுட்லுக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 1952ம் ஆண்டில் இருந்தே அரிசி - இறப்பர் உடன்படிக்கையின் கீழ் உள்ள பழைய நட்பும் இதற்கான காரணமாகும்.

இலங்கையின் அரசாங்க கட்சிகள் மாத்திரமன்றி, ஜே.வி.பி போன்ற இடதுசாரி சாய்வுக் கட்சிகளும், சீனாவுடனான சிறந்த உறவுகளுடன் புதுடில்லியின் அதிகப்படியான அரசியல், கலாசார, பொருளாதார செல்வாக்கை சமநிலைப்படுத்துவது முக்கியம் என்று நம்புகின்றன.

அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதிலும், ஆதரிப்பதிலும் புதுடில்லி பெரும்பங்காற்றியது என்பது இலங்கையில் இந்தியாவை விரும்பாத பிரிவினருக்கு, எப்போதுமே ஒரு வேதனையான விஷயமாகவே இருந்து வருகிறது என்றும் அவுட்லுக் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »