(நா.தனுஜா)
இன்றளவிலே தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் எவையும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு நியாயமான பிரச்சினைகள் எவையேனும் இருப்பின், அவற்றுக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படவேண்டும்.
அதேபோன்று தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமற்றது. எனவே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இப்போது சிறந்த தீர்வாக அமையும்.
அடுத்ததாக மன்னிப்பு என்ற விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரமன்றி, அது இராணுவத்தினருக்கும் பொருந்தக் கூடியதாக அமையவேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்..எம்.டி.நவாஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணார்ந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று (26) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி, தாம் உரிமைப் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டமைக்கான காரணம், தேசிய நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றின் ஊடாக தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கு மேற்கொண்ட தீர்மானம், தமது அரசியல் கட்சிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான கொள்கை ரீதியான வேறுபாடுகள், தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வு, காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.