Our Feeds


Saturday, August 13, 2022

SHAHNI RAMEES

தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு – விருந்தினர் இல்லத்தை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்தல்

 

பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைநகர் பேங்கொக்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ளதாக பேங்கொக் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார்.

பேங்கொக்கின் டொன் மியுங் விமான நிலையத்தை, அன்றிரவு 8 மணியளவில் சென்றடைந்த அவரை, தாய்லாந்து காவல்துறையினரும், இராணுவத்தினரும் அழைத்துச் சென்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைவிடம் வெளியிடப்படாத விருந்தகம் ஒன்றில் அவர் தங்கியுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவுப் பணியகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சிவில் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பேங்கொக் போஸ்ட் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி, நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், விருந்தகத்திலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்ற வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விசா விலக்கு தொடர்பான 2013 ஒப்பந்தத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 90 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும்.

முன்னோக்கி பயணிக்கும் நோக்கத்துடன் தங்குவது தற்காலிகமானது என்றும், அரசியல் தஞ்சம் கோரப்படவில்லை என்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் டெனி சங்ரட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, தாய்லாந்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு, தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால், தாய்லாந்து அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »