டீசல் தட்டுப்பாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்தூக்கிகள் செயலிழந்துள்ளமையினால் அங்கு வசிக்கும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மின்தூக்கிகளை இயக்குவதற்கு அவசியமான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு முறைமை ஒன்று இல்லை என கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல அடுக்கு மாடி குடியிருப்புக்களில் டீசல் இல்லாமையால் மின்தூக்கிகள் இயங்காமல் போயுள்ளன.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காது அரசாங்கம் அசமந்த போக்கினை கடைப்பிடிக்கிறது.
இதன் காரணமாக தங்களது அடுக்கு மாடி குடியிருப்புக்களின் மின்தூக்கியை இயக்குவதற்காக டீசலை வழங்குமாறு அங்கு வாழும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான எரிபொருள் பிரச்சனையே தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேயசேகர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கனிய எண்ணெய் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ முனையத்துக்கு மின்சார உற்பத்திக்கு அவசியமான டீசல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் எம்பிலிப்பிட்டிய அனல்மின் நிலையத்துக்கு தேவையான உலை எண்ணெய் தற்போது நிறைவடைந்துள்ளதோடு எதிர்வரும் 2 நாட்களுக்கு மாத்திரம் போதுமான உலை எண்ணெய் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாகவும் மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
எனினும் சப்புகஸ்கந்த முனையத்துக்கு மேலும் ஒரு வாரத்துக்கு தேவையான எரிபொருள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில் தற்போது நீர்மின் உற்பத்தி இடம்பெறுவதால் குறித்த பிரச்சினை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது.