(எம்.மனோசித்ரா)
எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் செய்யப்பட்டுள்ள முற்பதிவுக்கமைய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படாமையின் காரணமாகவே நிரப்பு நிலையங்களுக்கருகில் மீண்டும் வரிசைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. எவ்வாறிருப்பினும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை எரிபொருள் விநியோகம் மீளவும் சீராகும் என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீண்டும் எரிபொருள் வரிசைகள் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டீ.வி.ஷாந்த சில்வா தெரிவிக்கையில் ,
எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் முற்பதிவு செய்யப்பட்ட போதிலும் , பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமுள்ள எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக முன்னுரிமை பட்டியல் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அண்மித்து மீண்டும் நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளன.
பெற்றோல் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ளமையினால் , அதனைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படலாம். டீசல் விநியோகத்திலும் கடந்த ஓரிரு தினங்களாக நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும் , முத்துராஜவெல மற்றும் கொலன்னாவை முனையங்களிலிருந்து டீசல் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் டீசல் தட்டுப்பாடு திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் சீராகும் என்றார்.
எவ்வாறிருப்பினும் சில அரச டிப்போக்களில் தமது வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதனால் திங்கட்கிழமை பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்று அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் வருகை தரவிருந்த டீசல் கப்பலொன்று ஒரு நாள் தாமதமாக நாட்டுக்கு வருகை தந்தமையின் காரணமாகவே டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
டீசல் மற்றும் பெற்றோல் ஆகிய இரண்டையும் ஒரே தாங்கியில் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுவதனாலேயே பெற்றோல் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.