தேசிய விண்வெளி நிர்வாக நிறுவனமான 'நாசா' சந்திரனுக்கான தனது பயண நடவடிக்கைகளை மேம்படுத்த தீர்மானித்துள்ளது.
50 வருட இடைவேளைக்கு பின்னர், நாசா விஞ்ஞானிகள் தற்போது சந்திரன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
முன்னர் எப்போதும் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த வாகனம் ஒன்றை நாசா வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலானவர்கள் எதிர்காலத்தில் சந்திரனின் மேற்பரப்பில் இலகுவாக பயணிக்ககூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் விஞ்ஞானிகளின் திட்டத்திற்கு அமைய சந்திரனுக்கும் அப்பால் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு எதிர்வரும் 2040 ஆம் ஆண்டளவில் மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர முடியும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், ஓரியன் என பெயரிடப்பட்ட சோதனை விண்கலம் இன்று புளோரிடாவில் உள்ள கெனடி விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இன்று ஏவப்படும் இந்த விண்கலம் ஒரு பெரிய வளைவுடன் சந்திரனை சுற்றி வந்து, ஆறு வாரங்களின் பின்னர் பசுவிக் சமூத்திரத்தில் இறங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படியான பல்வேறு சோதனைகள் மூலம் சந்திரனை மட்டுமல்லாது செவ்வாயையும் இலகுவாக சென்றடையலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 1969ஆம் ஆண்டு முதன்முறையாக நீல் அம்ஸ்ரோங் மற்றும் பஸ் அல்ரின் ஆகியோர் தமது பாதங்களை சந்திரனில் பதித்தபோது, விண்வெளி பயணத்தில் புதிய யுகம் ஒன்றை உலக மக்கள் உணர்ந்தனர்.
இந்த நிலையில், 50 வருடங்களுக்கு பின்னர் தற்போது மிக நவீன விண்வெளி பயணத்தை நோக்கி மக்கள் பயணிப்பதாக நாசாவின் விஞ்ஞானிகள் பெருமிதம் கொண்டுள்ளனர்.