வெளிநாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வெளியிடும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செயன்முறை 06 வாரங்களுக்குள் இறுதிசெய்யப்படும்.
இதேவேளை, சில்லறை நடவடிக்கைகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை பரிசீலித்து வருவதாக தி சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மாதிரியின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க வேண்டும், அதே நேரத்தில் போக்குவரத்து மற்றும் சேமிப்பு வசதிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும். இதற்காக அரசாங்கம் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து சேவைக் கட்டணத்தைப் பெறும்.