வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை - மேம்பாலம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள கடும்போக்கு அமைப்பொன்றின் செயற்பாட்டாளராக கருதப்படும் டொன் பிரியசாத்தின் சகோதரான மீதொட்டமுல்லை - கலங்சூரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான பிரகாஷ் திலின குமார என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர். இந்த சம்பவம் நேற்று (25) இரவு பதிவாகியுள்ளது.
வழமையாக இரவு வேளையில் குறித்த நபர் நண்பர்களுடன் ஒருகொடவத்தை மேம்பாலத்தின் அருகே நேரத்தை செலவழிப்பதாக தெரிவிக்கும் பொலிஸார், இவ்வாறான சந்தர்ப்பமொன்றிலேயே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கூரிய ஆயுதம் கொண்டு அவரை வெட்டி படு கொலை செய்துள்ளதாக கூறினர்.
கொலை செய்யப்பட்ட நபரும் இதற்கு முன்னர் பலரை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் இருந்துவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவில் அவர் ஒவ்வொரு மாதமும் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் வெல்லம்பிட்டி பொலிஸார் இந்த கொலை தொடர்பில் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகள் பிரகாரம், போதைப் பொருள் வர்த்தகத்தின் பிரதிபலனாக இக்கொலை நடந்துள்ளதாக சந்தேகிக்கும் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.