தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை
நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமை இரத்து செய்யப்படும் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் , ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை பின்பற்றப்படும். அத்துடன் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையும் நடைமுறையிலிருக்கும்.
தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் , அவை சரி செய்யப்படும் வரை வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும். 60 சத வீதமான இடங்களில் ஏற்கனவே இந்த முறைமை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகத்துக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
சகல சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடமும் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படும். தேசிய எரிபொருள் அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து , இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
தொழில் நிமித்தம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இவ்வார இறுதிக்குள் அது குறித்த தகவல்கள் வழங்கப்படும். அத்துடன் அவை அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படும். மின் பிறப்பாக்கிகள் மற்றும் வீட்டுத்தோட்ட இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்க்பபடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.