Our Feeds


Saturday, July 16, 2022

Anonymous

கோட்டாபய ராஜபக்‌ஷ கொள்ளையிடவும் இல்லை, திருடவும் இல்லை! - அலி சப்ரி MP

 


 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


நாட்டின் தற்போதைய அரசியல் செயற்பாடுகளால் மன விரக்தியடைந்திருக்கிறேன். அதனால் இந்த நாடாளுமன்றத்துக்கு பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியமைச்சருமான அலிசப்ரி தெரிவித்தார்.


நாடாளுமன்றம் இன்று (16) கூடி கலைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டின் அரசியல் நடவடிக்கைகளை பார்க்கும்போது மனம் விரக்தியடைந்திருக்கிறேன்.

மக்களுக்கு, நாட்டுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்குடனே அரசியலுக்கு வந்தேன். நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத நிலை இருக்குமானால் தொடர்ந்து இந்த அரசியலில் இருப்பதில் பயன் இல்லை.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் நானும் தீவிரமாக ஈடுபட்ட ஒருவன். என்றாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி, கடன் சுமை, ரஷ்யா யுக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அவருக்கு ஆலாேசனை வழங்கியவர்களின் பிழையான தீர்மானங்களே கோட்டாபய ராஜபக்க்ஷவின் இந்த நிலைக்கு காரணமாகும்,

மாறாக கோட்டாய ராஜபக்க்ஷ திருடவில்லை. கொள்ளை அடிக்கவில்லை. மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவே முயற்சித்தார்.

குறிப்பாக, இரசாயன உரம் தொடர்பான தீர்மானமும் அவருக்கு அவரது ஆலாேசகர்கள் வழங்கிய உபதேசத்தின்  அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். என்றாலும்  அரசாங்கம் என்ற வகையில் எம்மிடமும் சில தவறுகள் இருந்தன.

தீர்மானங்களை எடுக்கும்போது நாங்கள் அதனை விரைவாக மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடியை சமாளித்துக் கொள்ள முடிந்திருக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »