சர்வதேச போக்குவரத்து தொடர்புகள் எவையும் இன்றி குரங்கு அம்மை நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை ஒரு வைரஸ் நோய் என்பதால் எந்நேரத்திலும் இலங்கையில் பரவக் கூடிய அபாயம் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை நோய் குறித்து தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்நோயால் அதிக எண்ணிக்கையான ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது இனங்காணப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இவ்வாறான பாலியல் தொடர்புகள் ஊடாக இந்நோய் பரவுவதாக இது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மாறாக ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகுதல் மற்றும் சுவாசத்தின் ஊடாகவே பரவுகின்றமை உறுதிப்படுத்தப்படுகிறது. குரங்கு அம்மை மனிதர்களிடமிருந்து மாத்திரமின்றி விலங்குகளிடமிருந்தும் பரவக் கூடும். இதன் அறிகுறிகளாக ஆரம்பகட்டத்தில் காய்ச்சலும் பின்னர் உடற் தோல் பகுதியில் படர் தடிப்புக்கள் என்பன ஏற்படும். இவை இலகுவில் இனங்காணப்படக் கூடிய அறிகுறிகளாகும்.
இரு பிரதான பிறழ்வுகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. குறித்த பிறழ்வுகள் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இவற்றை பிசிஆர். பரிசோதனை ஊடாக இனங்காண முடியும். அதற்கான வசதிகள் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய ஆய்வு கூடங்களிலும் காணப்படுகின்றன.
இதற்கான மருந்துகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சின்னம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியானது, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக 85 சத வீதம் சாதகமாக பலன் தரக்கூடியது.
இலங்கையில் இதுவரையில் இந்நோய் இனங்காணப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இது ஒரு வைரஸ் நோய் என்பதால் , எந்த சந்தர்ப்பத்திலும் பரவக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. எனவே முகக் கவசம் அணிதல் , நோய் அறிகுறிகள் காணப்படுபவர்களிடம் நெருங்கி பழகாதிருத்தல் என்பவற்றின் மூலம் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.