Our Feeds


Saturday, July 16, 2022

SHAHNI RAMEES

பதில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள பல அதிரடி தீர்மானங்கள்..!

 

பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளார்.

மேலும், வரும் ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படும் நிவாரண வரவு செலவு திட்டத்தில் இருந்து கூடுதல் நிதியை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில், உணவு பாதுகாப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், செயல்முறையை வலுப்படுத்தவும் பதில் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

குறிப்பாக எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் துரிதமாகவும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வர்த்தகர்கள் தமது தொழிலை தடையின்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத் தலைவர்களால் கையளிக்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் பேரவை நல்லதொரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து போராட்டகாரர்களுக்கு அறிவிக்கப்படும் என பதில் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »