Our Feeds


Friday, July 15, 2022

Anonymous

ராஜபக்க்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் செயற்படுவார்! -பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

 



(இராஜதுரை ஹஷான்)


ராஜபக்க்ஷர்களின் கட்டளைகளுக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். பெரும்பாலான தரப்பினரது ஆதரவு கிடைக்கப்பெறுமாயின் இடைக்கால ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் .புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். காலி முகத்திடலில் 90 க்கும் அதிகமான நாட்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது சாதாரணதொரு விடயமல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடியே அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவின் பலவீனமான நிர்வாகத்தையும்,பொதுஜன பெரமுனவின் தான்தோன்றித்தனமான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.

நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள அரச தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிறந்த படிப்பினையை எடுத்துரைத்துள்ளார்கள் மேலும் .போராட்டம் நிறைவடைந்து விட்டது இனி வழமை போல் செயற்படலாம் என அரசியல்வாதிகள் ஒருபோதும் கருத கூடாது.

போராட்டகாரர்களின் தியாகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.போராட்டகார்கள் அரசியல் வரபிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காக போராட்டத்தில் ஈடுபடவில்லை. எதிர்கால தலைமுறையினருக்காக இளைஞர்கள் தங்களின் நிகழ்காலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள்.காலி முகத்திடலில் 90 நாட்களுக்கும் அதிகமாக முகாமிட்டு ‘கோ ஹோம் கோட்டா’ என போராடுவது சாதாரணதொரு விடயமல்ல.

மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது சிறந்த அரச தலைவருக்கு அழகல்ல.நெருக்கடியான.

சூழ்நிலையை ரணில் விக்கிரமசிங்க சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டபோது திரைமறைவில் இருந்து சகல முயற்சிகளையும் தோற்கடித்து விட்டு ராஜபக்க்ஷர்களின் அனுசரணையுடன் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதில் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டு, தற்போது இடைக்கால ஜனாதிபதிவியை அடைய முயற்சிக்கிறார். ராஜபக்க்ஷர்களின் கட்டளைக்கமையவே பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். நாடாளுமன்றில் பொதுஜன பெரமுனவுக்கு அதிக பலம் உள்ள காரணத்தினால் அவர்களும ராஜபக்க்ஷர்களுக்கு சார்பாகவே செயற்படுவார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »