கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்துக்குள் வைத்து, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணி போராட்டக்காரராக விளங்கிய தானிஸ் அலி என்பவரை சிஐடியினர் நேற்று முன்தினம் (26) இரவு அதிரடியாக கைது செய்திருந்தனர்.
குடிவரவு – குடியகல்வு பரிசோதனைகளையும் தாண்டி, துபாய் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் அமர்ந்திருந்தபோது, விமானத்துக்குள் நுழைந்த கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் திறந்த பிடியாணை ஒன்றிருப்பதால் கைது செய்வதாக கூறி, தானிஸ் அலியை இழுத்துச் சென்றனர்.
இதன்போது விமானத்துக்குள் இருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள், பொலிஸாரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முதலில் எந்த ஆவணங்களையும் காண்பிக்காது தானிஸ் அலியை கைது செய்ய சிஐடி குழுவினர் முயன்ற நிலையில், அதற்கு விமானத்தில் இருந்த பயணிகளும், தானிஸ் அலியும் இடமளிக்கவில்லை.
விமானம் எவ்வளவு நேரம் தாமதமடைந்தாலும் பரவாயில்லை என இதன்போது குறிப்பிட்ட விமான பயணிகள், போராட்டத்தில் ஈடுபட்டதை மையப்படுத்தி பழிவாங்களுக்காக கைது செய்வது தொடர்பில் பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டனர்.
கொள்ளையடித்தவர்கள், கொலை செய்தவர்களை தப்பிச் செல்ல வழி விட்டுவிட்டு, அதற்கு எதிராக போராட்டம் நடத்தியவரை கைது செய்வதற்கு முயல்வது பொலிஸாரின் இயலாமை என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் தொடர்ச்சியான எதிர்ப்பின் பின்னர், விமானத்துக்குள் நுழைந்த கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி , பிடியாணை உத்தரவொன்றின் பிரதியை தானிஸ் அலிக்கு காண்பித்து கைதுக்கு முயன்றார்.
எனினும் அவர், குறித்த பிரதியை ஏற்க மறுத்ததுடன், கைது உத்தரவு இருப்பின் ஏன் குடிவரவு, குடியகல்வு சோதனையின்போது தன்னை நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
எனினும் விமானத்துக்குள் நுழைந்த சிஐடி குழுவினர், எதிர்ப்புக்களை மீறி தானிஸ் அலியை விமானத்திலிருந்து இழுத்துச் சென்றனர்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், அவ்வறிக்கையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள் பலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரைக் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கை பிரகாரம் தானிஸ் அலிக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
அதன்படி தானிஸ் அலி எனும் சந்தேக நபர் கடந்த ஜூன் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்க வந்தபோது நிதியமைச்சின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை தொடர்பில் கோட்டை பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகாமையால் அந்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச் சொத்துக்கள் மீது விளைவிக்கப்பட்ட சேதங்களை மையப்படுத்தி கோட்டை நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஜூன் 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த போராட்டகாரர்கள் குழுமியிருந்த பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர்களை மீது பலத்காரமாக தடுத்து வைத்த சம்பவத்தில் சந்தேக நபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் கோட்டை நீதிமன்றுக்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஜூன் 13 ஆம் திகதி கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து நேரலை ஒளிபரப்புகளுக்கு தடை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 20 ஆம் திகதி காலி முகத்திடலுக்கு முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு சேதப்படுத்தபட உ ள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பகுதிக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதிமன்றம் உ;உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடை உத்தரவை கையேற்க சென்ற கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பிரதான சந்தேக நபராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் விமானத்துக்குள் வைத்து தானிஸ் அலியை கைது செய்யும் போது, சி.ஐ.டி.யினர் பீ 22394/22 எனும் வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் அதுவே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட தானிஸ் அலி சிஐட. அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை நேற்றிரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.