எரிபொருள் கொள்வனவுக்கு கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாக உள்ளது. சீனா, இந்தியாவிடமிருந்து சாதகமாக பதில் இதுவவரை கிடைக்கப்பெறவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டால் மாத்திரமே ஏனைய நாடுகள் நம்பிக்கையுடன் ஒத்துழைப்பு வழங்கும். இந்தியா மாத்திரமே நெருக்கடியான சூழ்நிலையில் கடனுதவி திட்டத்தின் ஊடாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாட்டின் உள்ளக அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முழுமையாக தாமதப்படுத்தியுள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மையில்லாவிடின் பொருளாதார நெருக்கடி மேலும் ஒப்பிட முடியாத அளவுக்கு தீவிரமடையும் என்பதை சகலரும் பொறுப்புடன் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.