இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்ட தானிஸ் அலி என்பவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தற்போது அவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் அவர் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபர், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி செல்ல முற்பட்ட நிலையில் விமானத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபாவாஹினி கூடடுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.