முன்னிலை சோசலிச கட்சியை தடை செய்வது தொடர்பில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் குறித்த கட்சியை தடை செய்வது தொடர்பில் இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை எட்டப்படாத நிலையில், அது குறித்து அவதானம் செலுத்தி பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சியின் பங்களிப்பு மிகப் பெருமளவில் இருப்பதாக நம்பப்படும் பின்னணியில், அக்கட்சியை தடை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறான பின்னணியிலேயே முன்னிலை சோசலிசக் கட்சியின் நுகேகொடையில் உள்ள தலைமை அலுவலகம் இன்று (29) காலை இரு வேறு குழுவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்கள் வருகை தந்து அலுவகத்தை சோதனையிட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாயகொட தெரிவித்தார்.
ஒரு குழு சிவில் உடையில் இருந்ததாகவும் அவர்களிடம் எந்த சோதனை உத்தரவுகளும் இருக்கவில்லை எனவும் தெரிவித்த கட்சியின் உயர் மட்ட உறுப்பினர் ஒருவர், 2 ஆவதாக வந்த குழு மிரிஹானை விசேட விசாரணைப் பிரிவினர் என அடையாளப்படுத்தியதாக குறிப்பிட்டார்.