நீண்ட நாட்களின் பின்னர் ‘ஹஃபா’ எரிபொருள் விற்பனை நிலையத்துக்கு டீசல் கிடைத்துள்ள நிலையில், அவற்றினை விவசாயிகளுக்கு வழங்காமல், எரிபொருள் நிலையத்தினர் தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு வழங்கியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கமநல சேவைகள் நிலைய அதிகாரி ஆகியோருக்கு இடையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தலா 20 லீட்டர் எனும் கணக்கில் டீசல் வழங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதற்கிணங்க அட்டாளைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தினால் விவசாயிகளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதி அட்டையில் ஏக்கர் ஒன்றுக்கு தலா 20 லீட்டர் எரிபொருள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இன்று காலை – குறித்த எரிபொருள் நிலையத்துக்கு விவசாயிகள் சென்ற போது, எரிபொருள் நிலையத்தினர் தமக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வேளாண்மை அறுவடை இயந்திரங்களுக்கு பெருமளவு டீசலை வழங்கியதாகவும், விவசாயிகளுக்கு ஏக்கரொன்று 05 லீட்டர் டீசல் மட்டுமே வழங்க முடியும் என கூறியதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து விவசாயிகளுக்கும் எரிபொருள் விற்பனை நிலைய நிர்வாகத்தினருக்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சில விவசாயிகளுக்கு மட்டும் டீசலை விநியோகித்த எரிபொருள் விற்பனை நிலையத்தினர், பின்னர் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தாம் விவசாயிகளுக்கு டீசல் வழங்குவதற்காக தமது பணத்தைக் கொடுத்து டீசல் கொண்டுவரவில்லை என்றும், தாம் விரும்பியபடி வியாபாரம் செய்வதற்காகவே டீசலைக் கொண்டு வந்ததாகவும் – குறித்த எரிபொருள் நிலைய நிருவாகத்தினர் கூறியதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
விவசாயிகளுக்கு ஏன் டீசல் தேவை
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அறுவடை இயந்திர உரிமையாளர்கள், ஒரு ஏக்கருக்கு – அறுவடைக் கூலியாக 20 ஆயிரம் ரூபா பெறுகின்றனர்.
ஆனாலும், அறுவடை இயந்திரங்களுக்கான டீசலை – நெல் வயல் உரிமையாளர்கள் வழங்கினால், அறுவடைக் கூலியாக 15 ஆயிரம் ரூபாவை இயந்திர உரிமையாளர்கள் பெறுகின்றனர். இவ்வாறு டீசலை கொடுத்து அறுவடை செய்வது விவசாயிகளுக்கு லாபமாகும்.
சிலவேளைகளில், அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் கிடைக்காதபோது, விவசாயிகள் தமது வயலை அறுவடை செய்ய முடியாத நிலையும ஏற்படுகிறது.
இதன் காரணமாகவே, விவசாயிகள் தமக்கு டீசலை வழங்குமாறு கோருகின்றனர்.
முறைகேடு
அட்டாளைச்சேனை ஹஃபா எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் மட்டுமன்றி – பெற்றோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் விநியோகத்திலும் மோசடி இடம்பெறுவதாக மக்கள் இன்று ஊடகங்கள் முன்பாக குற்றஞ்சாட்டினர்.
இரவு வேளைகளில் இந்த எரிபொருள் விற்பனை நிலையத்தினர் தமக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் – பெருந்தொகையான பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதாகவும், அவ்வாறு வழங்குவதை தாம் நேரடியாகக் கண்டதாகவும் எரிபொருள் நிலையத்தின் முன்பாக திரண்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை வரிசையில் காத்திருந்து பெற்றோல் பெறும் மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவுக்கு மட்டுமே பெற்றோல் வழங்கப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் நிலையத்தினருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அதிகளவு பெற்றோலை வழங்கி வருவதாகவும் இதன்போது பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
எரிபொருள் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்: 0711 691 691