முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்பதனால், அவர் நாட்டிற்கு வருவதற்கான உரிமை உண்டு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
“எனினும், அவர் இனி நாட்டின் ஜனாதிபதியாக இல்லை, ஜனாதிபதிக்கான விலக்குரிமையும் இல்லை. அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும். அவருக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
“மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும். அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் இதை ஒருபோதும் நிறுத்த முடியாது. அடக்குமுறைக்கு எதிராக மேலும் மேலும் மக்கள் முன்வருவார்கள். அது அரசியல் நெருக்கடியை மோசமாக்கும். அரசியல் நெருக்கடி மோசமடையும் போது – பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.