Our Feeds


Saturday, July 23, 2022

SHAHNI RAMEES

பொது அமைதியை நிலை நாட்ட அவசரகால சட்டத்தை அமுல் செய்ய தயங்கப் போவதில்லை - பொலிஸார் அறிவிப்பு

 

பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எந்தவொரு ஒன்று கூடலையும், ஆர்ப்பாட்டத்தையும் கலைக்க சிறப்பு அதிகாரம் , அவசர காலசட்ட  விதிமுறைகள் ஊடாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அசங்க கரவிட்ட அறிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்,  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,  பொலிஸ் ஊடக பிரிவின் உதவிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் உதயகுமார வுட்லர் ஆகியோருடன் விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்தார்.

இந் நிலையில்  பொலிஸார், நாட்டில் தற்போது நிலவும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தமது கடமைகளை முன்னெடுப்பதாகவும்,  பொது அமைதியை  நிலை நாட்டும் நோக்கில் சட்டத்தை அமுல் செய்ய ஒரு போதும் பின் நிற்கப்போவதில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதன்போது குறிப்பிட்டார்.

 விஷேடமாக இன்றைய ( 23) தினம் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், நேற்று 22 ஆம் திகதி அதிகாலை காலி முகத்திடம் போராட்டக் காரர்களை  ஜனாதிபதி செயலக வாயிலருகே இருந்து கலைக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்த பின்னர் அவசரகால சட்டம் மற்றும் அதன் கீழான விதிமுறைகள் தொடர்பில் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அசங்க கரவிட்ட  பொது மக்களுக்கு விளக்கமளித்தார்.

' கடந்த ஜூலை 17 ஆம் திகதி பொது  பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின்  கீழ் அவசரகாலச் சட்டம் அமுல் செய்யப்பட்டு அதன் கீழான விதிகள்  வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவசரகாலச் சட்டங்கள் பொது அத்தியாவசிய சேவைகள், நுழைவு உரிமை, தேடுதல் மற்றும் கைது செய்யும் உரிமை, குற்றங்கள் மற்றும் தண்டனைகள், விசாரணைகள் மற்றும் சோதனைகள் மற்றும் இதர விபரங்கள் தொடர்பான ஏழு பகுதிகள் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

 அதில் 7 ஆம் பிரிவின் கீழ் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும்  சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்குள் பொலிஸாரும்  முப்படையினரும் உள் வாங்கப்பட்டுள்ள நிலையில்  அவர்களது கடமைகளை இடையூறின்றி, தடங்கல்கள் இன்றி முன்னெடுத்துச் செல்ல  அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

எவரேனும் இடையூறு ஏற்படுத்துவாறாயினின் அவருக்கு எதிராக சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்க ஏற்பாடுகள் உள்ளன. அவ்வாறான ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது அசையும் அசையா சொத்துக்களை அரச உடமையாக்கவும் அவசரகால விதிமுறைகள் ஊடாக இயலுமை உள்ளது.

குறிப்பாக தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள அவசர கால சட்ட விதிமுறைகளுக்கு அமைய,   சோதனை செய்தல், கைது செய்தல் தடுத்து வைத்தல் அதிகாரங்கள் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

 தண்டனை சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் சார் குற்றங்கள்,  அக்கோவையில் 427 ஆம் அத்தியாயம் முதல் 446 ஆம் அத்தியாயம் வரை குறிப்பிடப்பட்டுள்ள அச்சுறுத்தல் விடுத்தல், அத்து மீறல் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரும்  இராணுவத்தினரும் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

 அத்துடன், நாடளாவிய ரீதியில் அல்லது பிரதேச மட்டத்தில் தேவை ஏற்படும் போது பொலிஸ் ஊரடங்கை அமுல் செய்யும் அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு  இந்த அவசரகால சட்ட விதிகள் ஊடாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. 

இது விஷேட நிலைமையாகும்.   அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை மீறி நடந்துகொள்வோர் தொடர்பில் பொலிஸார் முப்படையினர் தமது அதிகாரங்களை பயன்படுத்தலாம்.

 அவசரகால சட்ட விதிமுறைகளின் 5 ஆவது பிரிவின் பிரகாரம் குற்றங்கள், தண்டனை என்பன விபரிக்கப்பட்டுள்ளன.

 பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கைகளின் போது உயிர்ச் சேதங்கள் ஏற்படுமாயின் அதனை  குற்றவியல் சட்டத்தின் கீழான  தற்பாதுகாப்பின் போதான மரணமாக கருதி செயற்பட ஏற்பாடுகள் உள்ளன.

 இதனைவிட சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் செயற்படவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.

 விசாரணை அதிகாரங்களைப் பொருத்தவரை ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் மன்றில் ஆஜர் செய்ய வேண்டியது சாதாரண சட்ட விதிமுறையாகும். எனினும் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணி நேரம் வரை நீதிமன்றில் ஆஜர் செய்யாமல் விசாரிக்கும் உரிமை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உள்ளது. 

அத்துடன் 3 நாட்களில் விசாரணைகளை முடித்து சந்தேக நபரை ஆஜர் செய்ய முடியாவிட்டால், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சந்தேக நபர் ஒருவரை மன்றில் ஆஜர் செய்யாது 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவரின் வீடு, வர்த்தக நிலையம்,  தங்குமிடத்துக்குள் நுழைந்து  அல்லது அது சார்ந்து அச்சுறுத்தல் விடுப்பதும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 பொது வீதிகள், ரயில் தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்டவைக்கு சேதம் விளைவிப்பதும் அவசரகால சட்டத்தின் கீழான குற்றங்களாகும்.

 ஏதேனும் ஒருவர் இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அத்தகவலை வெளிப்படுத்தாமல் இருப்பதும் குற்றமாகும்.  அவசரகால சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கோ அல்லது அப்பகுதி கிராமசேவகருக்கோ அறிவிக்க முடியும்.

 அதே போல, பொது அமைதியை பேணும் நோக்கில்,  ஒன்று கூடல்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை கலைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண சட்டத்தில் உள்ள அதிகாரங்களை விட விஷேடமாக இவ்வதிகாரங்கள் அவசரகால சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது என்பதை பொது மக்கள் நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் ' என தெரிவித்தார்.

 எவ்வாறாயினும்  நேற்று 22 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கலைக்க அவசர கால சட்ட விதிமுறைகளை பயன்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  நிஹால் தல்துவ, தொடர்ச்சியாக பொது அமைதியை பேண தற்போதைய சட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த பின் நிற்கப் போவதில்லை என கூறினார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »