ருஹுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர், ‘அனித்தா ‘பத்திரிகையின் ஆசிரியர் குழு முன்னாள் உறுப்பினர், சுதந்திர ஊடகவியலாளர் அன்டனி வேரங்க புஷ்பிக சிவில் உடையில் வந்த பொலிஸாரால் கடத்தல் பாணியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று ( 27) சிவில் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள அவர், பின்னர் வீடு நோக்கி செல்ல பஸ் வண்டியில் ஏறியிருந்தபோது, பஸ்ஸுக்குள் பிரவேசித்துள்ள 6 பேர் அவரை பலாத்காரமாக இழுத்துச் சென்று ஜீப் ஒன்றில் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த சட்டத்தரணி நுவன் போப்பகே உள்ளிட்ட குழுவினர் நேரில் கண்டுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தலையீடு செய்த பின்னர், ஊடகவியலாளர் அன்டனி வேரங்கவை கைது செய்ததாக பொலிஸார் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்ற விசாராணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு , பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிந்தது.