Our Feeds


Wednesday, July 27, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் விடயத்தில் தவறான தகவல்களை வழங்கி அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது - இம்ரான் எம்.பி

 

எரிபொருள் விடயத்தில் தவறான தகவல்களை வழங்கி அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது
 - இம்ரான் எம்.பி

எரிபொருள் விடயத்தில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் பிழையான தகவல்களை அவ்வப்போது வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ராஜபக்ஸக்களின் கடந்த கால பிழையான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றமையை நாட்டு மக்கள் நன்கு அறிவர். எனினும், இதனை மறைப்பதற்காக அரசாங்கமும், எரிபொருள் துறை அமைச்சரும் அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

நாட்டில் எரிபொருள் போதியளவு உள்ளது. அதனை ஒழுங்கு முறைப்படி வழங்கலாம் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக டோக்கன் முறையைக் கொண்டு வந்தனர். பின்னர் அதனை இரத்துச் செய்தனர். அடுத்து வாகனத்தின் கடைசி இலக்க முறை, அதன்பின் கிவ்ஆர் முறை, இப்போது முச்சக்கர வண்டிகளை பொலிசில் பதிவு செய்தல் என அடிக்கடி திட்டங்களை மாற்றி மக்களை சிரமப்படுத்தி வருகின்றனரே தவிர சீரான எரிபொருள் விநியோகம் செயயப்படவில்லை. நீண்ட வரிசைகளைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசு கூறுகின்றது. அதேவேளை அடுத்து வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் இருப்பதாக எரிபொருள்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இதனை உறுதிப் படுத்தும் வகையிலேயே பாடசாலைகளை 3 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அவ்வாறே அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதற்கான மட்டுப்பாடு அடுத்து ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. போதுமான எரிபொருள் இருந்தால் இந்த மட்டுப்பாடுகள் தேவையில்லை. 

இப்போது திடீரென மீண்டும் கொரோனாக் கதை வெளி வருகின்றது. நாட்டு மக்களுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனா அச்சமில்லை என்று பெருமிதமாகக் கூறினார்கள். இதனால் கொரோனா தொடர்பான பரிசோதனைகளை மட்டுப்படுத்தி விட்டதாகவும் அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் புதிய தொற்றாளர்களும், மரணங்களும் எவ்வாறு கண்டறியப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது. 

எரிபொருள் பிரச்சினையால் நாட்டை முன்கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை. அதனைச் சமாளிப்பதற்காக மீண்டுமொரு தடவை நாட்டை முடக்க அரசாங்கம் தயாராகி வருவதாலேயே கொரோனா கதையை எடுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.

இதிலிருந்து தெளிவாக விளங்குவது என்னவெனில் நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை இப்போதைக்கு தீரப் போவதில்லை. அடுத்த வருடமும் அது நீண்டு செல்லப் போகின்றது என்பது தான். 

ராஜபக்ஸக்கள் அதிகாரத்தில் இல்லாத போதிலும் அவர்களது கட்சியின் ஊடாக இன்னும் அவர்கள் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர் என்பதை ஜனாதிபதித் தெரிவின் போதும், புதிய அமைச்சரவை நியமனத்தின் போதும் நாம் கண்டுள்ளோம். 

நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்தோர் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் இதே நிலை தொடர்ந்து வரும் என்பது தவிர்க்க முடியாதது. எனவே, புதிய சிந்தனை ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஆட்சி மாற்றமொன்றின் அவசியம் இப்போது உணரப்படுகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »