QR முறைமைக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த முறைமையின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள் சீர்செய்யப்படும் வரை இறுதி இலக்க முறைமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
60 சதவீத இடங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறைமை பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உடனடியாக இந்த முறைமையை பொருத்துமாறு கோரப்படுகிறது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சகல எரிபொருள் நிரப்பு நிலை உரிமையாளர்களும் QR முறைமையை பின்பற்ற வேண்டும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின்போது QR வசதிகளுடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதலில் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்பிறப்பாக்கி வீட்டு பயிர்ச்செய்கை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை பதிவு செய்வதற்கான வசதி இந்த வாரத்துக்குள் வழங்கப்படும்.
முச்சக்கரவண்டிகளுக்கு பிரத்தியேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அரச பேருந்து நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பேருந்துகளை பதிவு செயற்வதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
QR முறைமையின் கீழ் சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் ஏனைய சேவைகளை வழங்கும் பிரிவுகளுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகவே பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.