பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை
தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.கொழும்பில இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டலஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க நாம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். இதன்போது எமக்குப் பாரியளவில் இளைஞர்களின் ஆதரவு கிடைத்தது. எனினும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், அதே இளைஞர்களே வீதிக்கு இறங்கி தற்போது போராடி வருகிறார்கள். நாமும் அரசாங்கத்தை சரியானப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்துக்குள் போராடினோம் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமைகளுக்கு நாங்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதை மறுக்கப்போவதில்லை. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
நானும் ஒரு ஊடகவியலாளராக இருந்திருக்கிறேன் என்பதாலேயே அவசரக்காலச் சட்டத்தின் பாரதூரத்தை அறிந்து வைத்திருக்கிறேன். மக்களின் கருத்துக்களை பாராளுமன்றம் பிரதிபலிக்கவில்லை. ஜனநாயகரீதியாக சட்டத்தை மதித்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்தார்.