ஜனாதிபதி மாளிகையில் கொள்ளையிடப்பட்ட சில பொருட்களுடன் மூன்று பேர் வெலிக்கடை பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு யன்னல் திரைகளுக்காக சுவரில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை பந்துகளை கொள்ளையிட்டு, அதனை விற்பனை செய்வதற்கு முயற்சித்த போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் ராஜகிரிய – ஒபேசேகரபுரவைச் சேர்ந்த 28,34 மற்றும் 37 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.