போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ள விடுபாட்டுரிமையை பயன்படுத்தி பிரதிவாதி பட்டியலிலிருந்து நீக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இந்த ஆட்சேபனையை முன்வைத்தார்.