நாடாளுமன்றில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில், முதல் முறையாக ஜனாதிபதியின் இலட்சினை அகற்றப்பட்டுள்ளது.
அந்த ஆசனத்திற்கு, அரச இலட்சினையைப் பொறிக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
ஜனாதிபதியை விளிக்கும்போது, அதிமேதகு என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதையும், ஜனாதிபதியின் இலட்சினைக் கொடியைப் பயன்படுத்துவதையும் இரத்துச் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்கமைய, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30க்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
புதிய கூட்டத்தொடர் ஆரம்பத்தின்போது, ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்த உள்ளார்.
அதன் பின்னர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி முற்பகல் 10 மணிவரை ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பார் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெவித்துள்ளார்.