ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாடடத்தின் போது கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவர் ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த அயர்ன் பாக்ஸ் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமித்த குற்றச்சாட்டில் கொழும்பு 14, களுபோவில மற்றும் ருக்மல்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து துணிகளை அயர்ன் பண்ணும் அயன் பாக்ஸ் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் முறையே கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.