எரிபொருள் மற்றும் எரிவாயு கோரியும், அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் நாடளாவிய ரீதியில் மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
எரிவாயு வழங்குமாறு கோரி கொழும்பு – ஹைலெவல் வீதியின், நாவின்ன சந்தியில் இன்று காலை முதல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது, அதேநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் நாவின்ன சந்தி, விஜேராம சந்தி ஆகியன இன்று காலை முதல் முடக்கப்பட்டிருந்தன.
வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இன்று மாலை மீண்டும் குறித்த வீதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, எரிவாயு கோரி முன்னெடுக்கப்படும் மற்றுமொரு போராட்டம் காரணமாக தெமட்டகொடையில் பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.