பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பீல்ட் மார்ஷல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
இடைக்கால ஐக்கிய அரசாங்கத்திற்கான கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் புதிய முயற்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டு பிரதமர் பதவியை வழங்கவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், சரத் பொன்சேகா பிரதமராக நியமிக்கப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரையில் தான் அவரிடமிருந்து எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு காலி முகத்திடலில் பொதுமக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்திற்று நிபந்தனைகள் இன்றி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.