Our Feeds


Tuesday, May 17, 2022

ShortNews Admin

GOTA GO GAMA போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது



காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருந்ததாக முன்னராக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் தற்போது பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சஞ்ஜீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக மற்றும் டேன் பிரியசாத் உள்ளிட்டோரும் அதில் அடங்குகின்றனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த நபர்களை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 39 நாளாகவும் தொடர்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »