(நீர்கொழும்பு நிருபர் எம்.இஸட். ஷாஜஹான்)
நீர்கொழும்பு எவென்ட்ரா (Evendra Hotel) ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த சொத்துக்களை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 35 பேர் பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீமிவான் நெல்சன் குமாரநாயக்க உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களில் 3 பேர் பெண்களாவர்.
கடந்த 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து நீர்கொழும்பு நகரிலும் பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது இங்குள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் ஹோட்டல்கள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன். வீடுகள் மற்றும் ஹேட்டல்களிலிருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸார் நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடத்தினர். இதன்போதே 35 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அனுமதியின்றி உட்பிரவேசித்தமை, சொத்துக்களுக்கு தீவைத்து சேதம் ஏற்படுத்தியமை, சொத்துக்களை கொள்ளையிட்டு தம்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர்கள் மீது மன்றில் சுமத்தப்பட்டிருந்தன.