கோட்டா கோ கிராமம் மற்றும் மைனா கோ
கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் இன்று (11) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதம அமைப்பாளர் ஆகியோர் வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வாளரையும் இன்றைய தினம் கோட்டகோ கிராம வளாகத்திற்கு அழைக்கவுள்ளதாகவும், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்ட இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஆறு புலனாய்வுக் குழுக்கள் அதற்கு நியமிக்கப்பட்டுள்ளன.