புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இடம்பெற்றது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
03 வாக்குகள் இதன்போது நிராகரிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது. முன்னதாக பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தமது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதில் தற்போது சிக்கல் இல்லை எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று (04) நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, இன்று நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பில் மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம்,உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவன்ச, இரா.சம்பந்தன், ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.