சட்டத்தரணி அலி சப்ரி மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்று சமூகத்தில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி மறுத்திருந்த நிலையில், சமூகத்தின் பல தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
நெருக்கடியான காலகட்டத்தில் நீதித்துறையை சரியாக நிர்வகித்ததுடன், நிதியமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், அதனை ஏற்று திறம்பட செயற்பட்டதாக அவருக்கு பாராட்டுக்குகள் குவிந்திருந்தன.
இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியதை அடுத்து அமைச்சரவை இரத்தாகிவிட்ட நிலையில், பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.
கடந்த வாரம் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், நாடு முழுவதும் ஆளும் தரப்பினரின் அல்லது மகிந்த வாதிகளின் அரசியல்வாதிகளின் வீடுகள் சேதமாக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தினால் பெரும் அச்சத்தில் உள்ள ஆளும் தரப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்க மறுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்பட்டால் மட்டுமே, பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும் என்ற நிலையில், தற்போது அமைச்சுப் பதவிகளுக்கு திறமையானவர்களை நியமிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையிலேயே சட்டத்தரணி அலி சப்ரி, அமைச்சப் பதவியை ஏற்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்தில் இருந்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.