முல்லேரியா அங்கொட சந்தியில் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஜீப் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த பஸ் ஒன்றை தீ வைக்க முயன்றவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (10) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (9) மாலை அம்பத்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த பஸ் ஒன்றை சுத்தம் செய்ய முற்பட்ட இராணுவத்தினருக்கு சிலரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த குழுவினர் பஸ் மீது பெற்றோல் ஊற்றி தீவைக்க முயன்றபோது, இராணுவத்தினர் இது குறித்து முல்லேரியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த இடத்திற்கு விரைந்த முல்லேரியா பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மீறி சிலர் பஸ்ஸிற்கு தீ வைக்க முயன்றபோது, அவர்களை வெளியேற்ற பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அங்கிருந்த நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.