நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதியமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், அரசு சாரா நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு கொடுப்பனவுகளை செலுத்துவதை கட்டுப்படுத்துதல், நீர் மற்றும் மின்சார கட்டணத்தை கட்டுப்படுத்துதல், கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் வாடகைக்கு விடுதலை நிறுத்துதல், உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டில் படிப்பதை நிறுத்துதல் போன்றவற்றை அந்தந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கும் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதியின்றி அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் மட்டத்தில் ஏற்படும் பல்வேறு செலவினங்களை செலுத்துவதை நிறுத்தி வைப்பது மற்றும் பல்வேறு நலன்புரி மானியங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படுதலலை நிறுத்துதல் போன்றவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள அனைத்து கணக்கியல் உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறான விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துமாறு திறைசேரி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரசாங்க செலவீனங்கள் மிகவும் அத்தியாவசியமான சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் வகையில் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.