இருதய நோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள், சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் உட்பட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டது.
அதன்போதே சுகாதார அமைச்சின் செயலாளர் மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.
நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளர்களுக்குத் தேவையான உணவு வழங்குபவர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்தி நிறுவனம், சுதேச மருந்து மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தனியார் வைத்தியசாலை சங்கங்கள் மற்றும் மருந்து இறக்குமதியாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.