ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணையை நேற்றே விவாதத்துக்கு எடுப்பது என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பிரத மர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
” இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப் திப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்து வதற்கும், அதிருப்திப் பிரேரணையை உடனடியாக விவாதிப்பதா என்பதை முடிவு செய்வதற்குமான வாக்கெடுப்பாகும்.
தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்திப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள்.
எனவே இது தோல்வியடையும் என நான் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு 16 ஆம் திகதியே அறிவுரைகூறியிருந்தேன்.
தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தை இன்றே நடத்துவதற்கு அனுமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாள்களில் இந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அடையாள அதிருப்திப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இப்போது ஜனாதிபதிக்கு ஆதரவானநாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிருப்திப் பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் சிறந்த மூலோபாய அணுகுமுறையை முற்போக்காகப்பயன்படுத்தினால் நல்லது. எனினும் கடந்த வாரம் தெரிவித்தபடி பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கப்படும். – என்றார்.