பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். 10 கட்சிகளின் நிலைப்பாடு இதுவோகவே உள்ளது.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூறவேண்டும். அவரின் ஆட்சி காலத்தில்தான் கூடுதல் கடன்கள் பெறப்பட்டன. மேலும் பல விடயங்களும் இடம்பெற்றன. எம்மை பொறுத்தவரையில் பஸில் ராஜபக்சவும், ரணில் விக்கிரசிங்கவும் ஒன்றுதான். பஸில் சால்வை அணிந்த ராஜபக்ச. ரணில் கோட்சூட் அணிந்த ராஜபக்ச.
எனவேதான் அரசில் இணைந்து, பதவிகளை ஏற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. 10 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும்.
அதற்காக இந்த அரசை சீர்குலைப்பதோ அல்லது நாட்டை வங்குரோத்து அடைய வைப்பதோ எமது நோக்கம் அல்ல. அரசால் முன்னெடுக்கப்படும் நல்ல திட்டங்களுக்கு எதிரணில் இருந்து ஆதரவு வழங்கப்படும். ஏனெனில் பொறுப்புமிக்கதொரு வகிபாகத்தை நாடாளுமன்றத்தில் வகிக்கவுள்ளோம். நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய திட்டங்களுக்கு எதிர்ப்பை வெளியிடுவோம். நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி எம்சீசீ உள்ளிட்ட விடயங்களை செய்து முடிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.” -என்றார் விமல்.