பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நேற்று மாலை பல்வேறு அரசியல் தகவல்கள் வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும் நேற்று மாலை அலரிமாளிகையில் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த பிரதமர், தான் பதவி விலகப் போவதில்லையெனத் தெரிவித்தார்.
அதனையடுத்து, அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி ஸ்தூபியை வழிபடுவதற்காக சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பை வந்தடைந்தார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது, அனுராதபுரத்தில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பதவி விலகுமாறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் வழிபாடுகளை நிறைவுசெய்து பிரதமர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பு திரும்பிய பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.
பிரதமருக்கு ஆதரவளிக்கும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று காலை 9 மணியளவில் சந்திக்க உள்ளனர்.
ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது புதிய முடிவை பிரதமர் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பிரதமர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டதாக வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமரது இணைப்பு செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் இதுவரைக்கும் அவ்வாறான கடிதம் எதுவும் பிரதமரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லையென தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இன்று தினம் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.