ராஜபக்க்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (12) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சி ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்கேயாகும். அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலரும் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 சுயாதீன கட்சிகள் புதிய பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளன.
இதன் ஊடாக இவர்கள் தெரிவிக்கும் செய்தி யாதெனில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கீழ் பிரதமர் மற்றும் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் என்பதாகும். ஆனால் மக்களின் கோரிக்கை அதுவல்ல. ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.