(எம்.ஆர்.எம்.வசீம்)
கோபத்துடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டு செல்லும். அவ்வாறானதொரு நிலைக்கு இடமளித்தால் லிபியாவுக்கு நடந்த நிலையே எமது நாட்டுக்கும் இடம்பெறும். அதற்கு இடமளிக்கக்கூடாது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் மேதின நிகழ்வு பத்தரமுல்லை அபேகமவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களும் காரணமாகும். அரசாங்கம் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது அதுதொடர்பில் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
என்றாலும் எமது பேச்சுக்கள் எடுபடவில்லை. தொடர்ந்து பிழையான தீர்மானங்களை எடுக்க ஆரம்பித்தபோது கடந்த மார்ச் 2ஆம் திகதி அரசாங்கத்திலிருந்து வெளியில் சந்து, அரசாங்கத்தின் தவறுகளை மக்கள் முன்பு பேச ஆரம்பித்தோம் என்றார்.