Our Feeds


Sunday, May 1, 2022

ShortNews Admin

நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் - தொழிற்சங்க கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை!



நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படக்கூடும் என கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான எரிபொருள் பௌசர்களே இருப்பதாகவும் எரிபொருள் பௌசர்கள் நாளை முதல் இயங்காது என்றும் கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.


எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கத் தவறியமைக்கு எதிராக இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) நள்ளிரவு முதல் நடவடிக்கைகளில் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளது.


தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் கோரும் கட்டணத்தை 60 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பில் சனிக்கிழமை பிற்பகல் விடயதான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது எனவும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் தாக்கம் இன்று முதல் உணரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எரிபொருளை விநியோகிப்பதற்காக 82 எரிபொருள் பௌசர்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம்  இல்லை என்று கூறிய அவர், அமைச்சர் வெறும் வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறார் என்றும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும், எதிர்காலத்தில் எரிபொருள் பிரச்சினை மேலும் மோசமடையும் என்றும் கூறினார்.


நான்கு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து கடைசி இரண்டு எரிபொருள் தொகுதிகள் நாட்டுக்கு வரவிருந்த நிலையில், ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தரகுப் பணம் பெற அதிகாரிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »