தேசப்பற்றாளர்கள் சிலர் நம்பிக்கையில்லா பிரேரணை எங்கே என்று கேட்டுகின்றனர். ஒன்று அல்ல ஒன்றுக்கு மேற்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளுடன் இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்போம். அரசாங்கத்துக்கு இந்த வாரம் தீர்க்கமானதாக அமையும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் என்ற சூது விளையாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பங்கேற்காது. எம்மை எவராலும் பங்கேற்கச் செய்யவும் முடியாது. பொதுஜன பெரமுனவின் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக அரங்கேற்றப்படும் இடைக்கால அரசாங்கம் என்ற நாடகத்துக்கு எவரும் ஏமாந்து விடக் கூடாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக் கொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டியிலிருந்து கொழும்பிற்கான பேரணியின் இறுதி நாள் நேற்று சனிக்கிழமை யக்கல நகரில் ஆரம்பமானது. இதன் போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டை வெற்றியடைச் செய்வதற்கு பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறோம். அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமின்றி ஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும். ஒன்று அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளுடன் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்போம். இதன்போது இரு பக்கமும் கால்களை வைத்திருக்கும் தேசப்பற்றாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இடைக்கால அரசாங்கம் என்பது பொது ஜன பெரமுனவுக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சியாகும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன்றி , ஐக்கிய மக்கள் சக்திக்கு வேறு எதுவும் முக்கியமானதல்ல என்றார்.